.

.

புதன், 15 ஜூலை, 2015

இணையத் தமிழே இனி!
*****************************

உலகினில் ஆயிரம் மொழிகள் -அவை
   என்னுயிர் தமிழ் போல் இல்லை
உலகினில் இதனைச் சொல்ல -கணனி
  இணையத்தளத்திற்கு ஈடு இல்லை.

மூன்று குலத்தமிழ் மன்னர் -அன்று
    ஆண்ட கதைதனை கேளீர்
அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் -இன்று
   காட்டிடும் தமிழ் இணையம் பாரீர்.

வள்ளுவன் கம்பன் போல -தமிழை
   போற்றியவர் யாரும் உண்டோ??
இறவாத புகழுடைய நூல்கள் -இன்றும்
   இணையத்தில் காணலாம் வாரீர்.

ஆங்கில மோகத்தில் திழைத்து -உலகில்
     அழிந்திடும் நிலை நம் மொழிக்கு
அவை யாவையும் இன்று தடுக்க -வந்த
    தமிழ் இணையங்களைப் பாரீர்.

மொழிதனைப் பயிலும் குழந்தை -அதை
    முறையாய்த் தொடரலாம் இங்கு
இலக்கண நூல்களும் தமிழகராதியும் -அதற்கு
  இணையத்தில் மென்பொருளாக காணீர்.

பிறநாட்டு நல்லறிஞர்கூட - தமிழை
   சுவைபட உணர்ந்தனர் இன்று
தேமதுரத் தமிழோசையை - உலகில்
  பரப்பிய பெருமை இணையத்திற்கே.

ஆய்வுகள் எத்தனை செய்தோம் -இன்று
   சான்றுடன் இணையத்தில் கண்டோம்
மாறிடும் வாழ்வில் இனி என்றும் -தமிழ்
    மாண்டிடாது காத்திடும் இணையம்.

சமூக வலைதளங்கள் கண்டோம்-அதில்
   அறிஞர் பலரை நட்பால் இணைத்தோம்
ஒரு தாய் வீட்டுப் பிள்ளையாய் -இன்று
   கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்.

தாய்த்தமிழ் மாறுவதில்லை - இனி
        தாகத்திற்கு இடமுமில்லை
மொழியின் தேவைகள் யாவையும் -இன்று
     வழங்கிடும் நிலையில் இணையம்.

துஷ்யந்தி



சனி, 4 ஜூலை, 2015

வாழத் தகுதியுண்டோ!
**************************

ஒரு விரல் சுட்டிக்காட்ட
மறு விரல் தன்னைக்காட்ட
குற்றங்கள் சொல்வாரடி- கிளியே
குற்றம் நிறைந்தாரடி.!

கண்கள் இரண்டிருந்தும்
காணும் திறனிருந்தும்
பிறர் பசியை உணராரடி- கிளியே
உவமானம் இவர்க்கேதடி.!

பெண்மை வாழ்க என்றே
பெரிதாய் சட்டங்கள் அமைத்தும்
வன்புணர்வில் இன்பம் காண்பாரடி -கிளியே.!
மன்னிப்பு இவர்க்கேதடி..!

கூட்டம் கூட்டி வைத்து
தோற்றமாய் மேடையேறி
சாட்டையாய் கருத்துரைப்பாரடி-கிளியே
அடுத்த கனம் மறப்பாரடி..!

அடுக்கடுக்காய் மாடி கட்டி
ஆடம்பரப் பொருள் சேர்த்து
செல்வந்தராவாரடி- கிளியே
கல் நெஞ்சம் கொண்டாரடி..!

பச்சிளம் குழந்தையொன்று
பசியினால் பிச்சை கேட்க
துஷ்பிரயோகம் செய்தாரடி- கிளியே
பேசிப் பயனென்னடி..!

அல்லும் பகலுமாய்
ஆண்டவன் கோயில் சென்று
பூஜைகள் செய்வாரடி- கிளியே
பிறர்கு உதவ மறந்தாரடி.!

பெற்றவரை மற்றவருக்காய்
அலட்சியம் செய்துவிட்டு
காப்பகத்தில் கைவிட்டாரடி- கிளியே
உண்மை அறியாரடி..!

போதைக்கு அடிமையாகி
போகும் பாதை தெரியாது
வாழ்வை வீண் செய்வாரடி- கிளியே
வாழ்வில் உயர்வேதடி..!

மாறும்உலகத்திலே
மனிதத்தை மறந்துவிட்டு
வாழப் பழகினாரடி - கிளியே
இவருக்கு வாழத் தகுதியுண்டோ???

துஷ்யந்தி.