.

.

புதன், 15 ஜூலை, 2015

இணையத் தமிழே இனி!
*****************************

உலகினில் ஆயிரம் மொழிகள் -அவை
   என்னுயிர் தமிழ் போல் இல்லை
உலகினில் இதனைச் சொல்ல -கணனி
  இணையத்தளத்திற்கு ஈடு இல்லை.

மூன்று குலத்தமிழ் மன்னர் -அன்று
    ஆண்ட கதைதனை கேளீர்
அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் -இன்று
   காட்டிடும் தமிழ் இணையம் பாரீர்.

வள்ளுவன் கம்பன் போல -தமிழை
   போற்றியவர் யாரும் உண்டோ??
இறவாத புகழுடைய நூல்கள் -இன்றும்
   இணையத்தில் காணலாம் வாரீர்.

ஆங்கில மோகத்தில் திழைத்து -உலகில்
     அழிந்திடும் நிலை நம் மொழிக்கு
அவை யாவையும் இன்று தடுக்க -வந்த
    தமிழ் இணையங்களைப் பாரீர்.

மொழிதனைப் பயிலும் குழந்தை -அதை
    முறையாய்த் தொடரலாம் இங்கு
இலக்கண நூல்களும் தமிழகராதியும் -அதற்கு
  இணையத்தில் மென்பொருளாக காணீர்.

பிறநாட்டு நல்லறிஞர்கூட - தமிழை
   சுவைபட உணர்ந்தனர் இன்று
தேமதுரத் தமிழோசையை - உலகில்
  பரப்பிய பெருமை இணையத்திற்கே.

ஆய்வுகள் எத்தனை செய்தோம் -இன்று
   சான்றுடன் இணையத்தில் கண்டோம்
மாறிடும் வாழ்வில் இனி என்றும் -தமிழ்
    மாண்டிடாது காத்திடும் இணையம்.

சமூக வலைதளங்கள் கண்டோம்-அதில்
   அறிஞர் பலரை நட்பால் இணைத்தோம்
ஒரு தாய் வீட்டுப் பிள்ளையாய் -இன்று
   கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்.

தாய்த்தமிழ் மாறுவதில்லை - இனி
        தாகத்திற்கு இடமுமில்லை
மொழியின் தேவைகள் யாவையும் -இன்று
     வழங்கிடும் நிலையில் இணையம்.

துஷ்யந்தி



சனி, 4 ஜூலை, 2015

வாழத் தகுதியுண்டோ!
**************************

ஒரு விரல் சுட்டிக்காட்ட
மறு விரல் தன்னைக்காட்ட
குற்றங்கள் சொல்வாரடி- கிளியே
குற்றம் நிறைந்தாரடி.!

கண்கள் இரண்டிருந்தும்
காணும் திறனிருந்தும்
பிறர் பசியை உணராரடி- கிளியே
உவமானம் இவர்க்கேதடி.!

பெண்மை வாழ்க என்றே
பெரிதாய் சட்டங்கள் அமைத்தும்
வன்புணர்வில் இன்பம் காண்பாரடி -கிளியே.!
மன்னிப்பு இவர்க்கேதடி..!

கூட்டம் கூட்டி வைத்து
தோற்றமாய் மேடையேறி
சாட்டையாய் கருத்துரைப்பாரடி-கிளியே
அடுத்த கனம் மறப்பாரடி..!

அடுக்கடுக்காய் மாடி கட்டி
ஆடம்பரப் பொருள் சேர்த்து
செல்வந்தராவாரடி- கிளியே
கல் நெஞ்சம் கொண்டாரடி..!

பச்சிளம் குழந்தையொன்று
பசியினால் பிச்சை கேட்க
துஷ்பிரயோகம் செய்தாரடி- கிளியே
பேசிப் பயனென்னடி..!

அல்லும் பகலுமாய்
ஆண்டவன் கோயில் சென்று
பூஜைகள் செய்வாரடி- கிளியே
பிறர்கு உதவ மறந்தாரடி.!

பெற்றவரை மற்றவருக்காய்
அலட்சியம் செய்துவிட்டு
காப்பகத்தில் கைவிட்டாரடி- கிளியே
உண்மை அறியாரடி..!

போதைக்கு அடிமையாகி
போகும் பாதை தெரியாது
வாழ்வை வீண் செய்வாரடி- கிளியே
வாழ்வில் உயர்வேதடி..!

மாறும்உலகத்திலே
மனிதத்தை மறந்துவிட்டு
வாழப் பழகினாரடி - கிளியே
இவருக்கு வாழத் தகுதியுண்டோ???

துஷ்யந்தி.

திங்கள், 18 மே, 2015

முள்ளிவாய்க்கால்
**********************

முற்பகலும் பிற்பகலும்
முன்னிரவும் பின்னிரவும்
எல்லாமுமே ஒன்றாக
இருட்டறையில் நாம் காண
விடிவெள்ளியாய் வெடிகுண்டுகள்
வெளிச்சங்காட்டி குருதிதனை
மண்ணிலே ஈரமாக்கி
மனித உயிர்களை எல்லாம்
பிணமாக உருமாற்றி
மனித மிருகங்களுக்கு புசிக்க
வழி செய்த இடம்...!

கண்ணிருந்தும் குருடராய்
வாயிருந்தும் ஊமைகளாய்
உணர்விருந்தும் ஜடங்களாய்
உரிமை இருந்தும் வெறுமையாய்
பலமிருந்தும் கோழையாய்
எம் சிந்தனைப் பதிவுகள் யாவும்
சினங்கொண்ட கயவர்களால்
சித்திரவதை செய்யப்பட்டு
மண்ணோடு மண்ணாய்
புதைக்கப்பட்ட இடம்..!

கொட்டும் மழையிலும்
குத்தும் வெயிலிலும்
ஒதுங்க இடமின்றி
அன்னத்தை மறந்து
அருசுவையை மறந்து
மண்ணிலே சிலநேரம்
கண்மூடிக் கிடக்கயில்
மனிதரென்றும் பாராமல்
உயிரோடு புதைகுழியில்
மனிதரெல்லாம் மடிக்கப்பட்ட
கொடுமை நிலைதனை
எங்கே சென்று சொல்வது...???

ஒளியில்லா இருட்டறையில்
வெடிகுண்டுகள் மேல் பாய
உடல்கள் சிதறிக் கிடக்க
பச்சிளங் குழந்தையொன்று
உயிரற்றத் தன் தாயின்
மார்பிலே பாலருந்தும்
கொடூரக் காட்சிக்கு
விடை எங்கே தேடுவது...!

தமிழனின் கேள்விகளுக்கு
விடையொன்று தந்ததாய்
பெரும்பான்மை உலகிற்கு
நாடகமொன்று நடாத்த
அமைக்கப்பட்ட மேடையே
"முள்ளிவாய்க்கால்"........இருந்தும்
இது முடிவல்ல ..........
நம் தொடக்கமே............!!!

துஷ்யந்தி


புதன், 29 ஏப்ரல், 2015

இறுதிவரை நானிருப்பேன்!

அன்னையைப் பிரிந்து
பால் மனம் மறந்து
என்னிலே தஞ்சமென
வந்த என் செல்லமே......

அன்னையாய் நானுன்னை
அன்பாலே வருடிச்செல்ல
இன்பங்கள் எத்தனை
சொல்லத்தான் தெரியவில்லை....

உன் சின்னக் குறும்பிலும்
செல்லச் சண்டையிலும்
என்னை நான் மறக்கின்றேன்
எங்கோ பறந்து செல்கின்றேன்.......

ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
என் சிந்தையில் பறப்பதாய்
எனக்குள்ளே ஆனந்தம்
பாசத்தில் பேரின்பம்.....

நீ பசியாலே துடிக்கையில்
பதறித்தான் போகின்றேன்
தினம் கண் விழிக்கையில்
வழியெங்கும் தேடுகிறேன்....

சின்னவள் உன்னிடம்
நற்பண்பை உணர்கிறேன்
நன்றியின் அர்த்தந்தனை
நன்றே கற்றுக் கொள்கிறேன்....

நீ காட்டும் அன்பிலே
திழைத்துத்தான் போகிறேன்
நித்தம் என் உறவாய்
உன்னை நான் பார்க்கிறேன்....

இன்பத்திலும் துன்பத்திலும்
என்னுடன் நீ கலந்திடுவாய்
இணைபிரியா அன்போடு
என்னோடு பயணம் தொடர்வாய்...

அதுவரை,
உயிரொன்று என்னுடலில்
நடமாட இருந்துவிட்டால்
விழகாது உன்னோடு
இறுதிவரை நானிருப்பேன்..!!!

துஷ்யந்தி.

கஞ்சாவும் கல்லூரி வாசலும்!



தீயென்று தெரிந்தும்
தொட்டுப் பார்க்கும் வயது
கல்லூரி வாழ்வில்
எல்லோர்க்குமான துடிப்பு.!

வீணான எண்ணங்களை
வாசல் வரை வந்து
தேனாகக் காட்டுவதில்
தீயோர்க்கு இன்பம்..!

சரியென்றும் பிழையென்றும்
தேடிப் பார்க்காது
பிழைகளில் நுழைவது
பலரது பழக்கம்...!

நோயாகப் போதையை
நுழைவித்து வாசலில்
நோக்கத்தை ஈடேற்றும்
சதிகாரர் எண்ணம்..!

சிலந்தி வலையிலே
மாட்டிக்கொண்ட வண்டாய்
வெளிவர வழியில்லா
மாணவர் எத்தனை...???

விழிப்பொன்றை ஏற்படுத்தி
விளக்கத்தைச் சொன்னால்
கல்லூரி வாசலும்
பூங்காவனமாய் மாறிடுமே..!

பெற்றோரின் பொறுப்பும்
ஆசிரியரின் போதனையும்
மாணவப்பூக்களை வழிதவற
நிச்சயம் விடுவதில்லை...!

அறிவைத் தேடும்
சிறியோர் மனதில்
அபாயத்தை விதைக்க
தடையென்று மொழிவோம்..!

சட்டங்கள் இயற்றுவோம்
சதிகாரரை வெல்லுவோம்
சமுதாய சீர்கேடுகளை
வளர விடாது தடுப்போம்...!!!

துஷ்யந்தி

சனி, 25 ஏப்ரல், 2015

புதிய வார்த்தைகள்


மாயையெனும்
போர்வை போர்த்தி
மனதில் நுழைந்த
காதல் பற்றி.......

கற்பனை உலகில்
பறந்திடும் பொழுது
அற்பமாய் தோன்றும்
ஆசைகள் பற்றி....

உலாவரும் மேகம்
மலைகளின் முகட்டை
முத்தமிடுகின்ற
மோகம் பற்றி....

பள்ளந் தேடி
பாதை வகுத்து
பாலாய்ச் சொரியும்
அருவிகள் பற்றி......

எழுதிய தாள்களை
எரித்து விடுவோம்......!
கறள் பிடித்த வார்த்தைகள்
இருள் படிந்த சிந்தனைகள்
தடம் பதித்த சுவடுகள்
நடம் பயிலும் பாதங்கள்
போதும் என் றெழுதுவோம்!

அலுத்துச் சலித்த
எழுத்துக்களுக்கு
கட்டாய ஓய்வென்றும்
சட்டம் இயற்றுவோம்!

அழுக்காய்ப் படிந்த
அறிவின் தேக்கம்-
நகர மறுக்கும்
"அடிமைத் தழிழன்" எனும்
நரகம்-
அறியாமை அவலங்கள்
அடிமைத்துவ எச்சங்கள்.

எழுதுவோம்
புத்துயிர் ஊட்டும்
புத்துணர்வூட்டும்
புதிய வார்த்தைகள்
வேண்டுமென்றெழுதுவோம்!

தனியொரு மனிதன்
தனியொரு இளைஞன்
தன்னம்பிக்கையுடன்
தாழ்வுணர்வின்றி
முன்னேறி வாழும்
எண்ணம் எழுதுவோம்!

புயலைப் போல
புற்றீசல் போல
புதிய வார்த்தைகள்
புறப்பட்டு வருக!

இளமை கொஞ்ச
அறிவு மிஞ்ச
மடமை ஓட்டி வலிமை ஊட்ட

சிந்தனைத் தீயுடன்
புதிய வார்த்தைகள்
புறப்பட்டு வருக!!!!!

துஷ்யந்தி









இன்றும் புத்துணர்வூட்டுவதாய்!


உயிரொன்று உருவாகி
வாழ்வொன்றை தொடர்கையிலே
கடந்துவந்த பாதைகளின்
அழியாத பல நினைவுகளை,,,

மழலையிலே கைகோர்த்த
மகிழ்ச்சியான நிமிடங்களை
மறந்தாலும் மறந்திடாத
பள்ளிப்பருவ துளிகளை,,,

மனதிலே மாற்றமுடியா
அழியாத சித்திரங்களை
இழந்துவிட்ட இழமையின்
இழக்காத வாசம்தனை,,,

கண்ணீரின் வலிகளால் ஆன
உறவுகளின் எண்ணங்களை
வார்த்தைகளால் சுட்டுப்போன
சடங்குகளின் நிமிடங்களை,,,

பரிசுகள் பெற்றுச்சேர்த்த
அழகிய அந்த நொடிகளை
பட்டம் பெறுகையில் பாராட்டிய
பெற்றோரின் மகிழ்ச்சியை,,,

வயதொன்று போகையிலே
தடயமிட்ட பிறந்தநாளை
வாழ்த்தி வாழ்த்தி மகிழ்ந்த
நட்புக்களின் புன்னகையை,,,

பாய்ந்தோடும் நதிகளின்
எழில் கொஞ்சும் அழகினை
கரைதொட்டு முத்தமிடும்
கடலன்னையின் நுரைதனை,,,

திருநாட்கள் கொண்டாடி
திருப்தி கண்ட நாட்களை
திரும்பத் திரும்ப பார்க்கவைத்த
பண்டிகை உணவுகளை,,,

திசைதெரியா தூரதேசம்
போய்ப் பார்த்த அழகினை
திகைத்து நின்று ஒரு நொடி
பார்க்க வைத்த அதிசயத்தை,,,

முகநூலிலே முகம் தெரியா
பல அன்பு உள்ளங்களை
பலகிவிட்டுப் பிரிந்துபோன
உருகவைத்த  உயிர் நட்புக்களை,,

கவிதையொன்று கவிதைவயலிலே
புனையவேண்டுமென்ற நினைவினை
கைக்கருகே கொண்டுவரும்
கணனிகளின் ஒளிதனை,,,

எண்ணற்ற கவிகளின்
எட்டிப்பிடிக்கா சிந்தனையை
எட்டிப்பிடிக்க நினைக்கையிலே
வழுக்கி விழும் நொடிகளை,,,

மறைந்தும் உயிர்வாழும்
பிரிந்தும் சோர்ந்திருக்கும்
நினைவின் விம்பமாக வாழும்
இன்றும் புத்துணர்வூட்டும்
அழியாப் புகைப்படமே..!!!!

துஷ்யந்தி









வியாழன், 16 ஏப்ரல், 2015

கனவான அந்த நாட்கள்

கேள்வி இருந்தும்
விடை தேவைப்படாத-நம்
உண்மை உள்ளம்!

கையுடன் கைகோர்த்தும்
கை மீறத் தோன்றாத
நட்பின் புனிதம்!

பொய்மை தொலைவிருந்து
வேடிக்கைப் பார்த்த
கறைப் படா மனங்கள்!

கல்வியெனும் தூண் பிடித்து
பள்ளிப் பருவத்தை ஏறிப்பார்த்த
துணிந்த நாட்கள்!

ஆயிரம் சகோதரங்கள்
ஒன்றாய்க் கூடியிருந்த
அழகிய குடும்பம்!

பேனைகளும் புத்தகங்களும்
பொக்கிஷமாய் சோர்த்திட்ட
பொற்க் காலம்!

சான்றிதழ்கள் வாங்கி
சமூகத்தில் நிலைகொள்ள
அத்திவாரமிட்ட  அறிவு!

போட்டிகளை சவால்களாய்
வென்றெடுத்த தைரியம்!

அழகிய நிறங்களால்
வர்ணம் தீட்டிய மனவானில்
பறந்து திரிந்த அந்த
நாட்கள்!

கவலைகள் துளியளவும்
கைவைக்காத
பிள்ளையுள்ளம்!

இழந்துவிட்டேன் - அந்த
இனிய நாட்களை.....
வளர்ந்துவிட்டேன் - ஆனால்
சுயநலம் உள்ளிருக்கு.....
சுவடுகளான நினைவுகள் மட்டும்
நிலைத்திருக்கு என்னுடன்...
தேடினாலும் கிடைக்குமா....
கனவுகளோடு தொடர்கின்றேன்
கனவான அந்நாட்களை!!!!!

துஷ்யந்தி

புதன், 15 ஏப்ரல், 2015

கவிஞன்

கவிஞன்..!
*************

விழியென்னும் தடாகமதில்
மொழியெல்லாம் உயிர் பெற்று
சிந்தனைச் செடிகளாய்
கவியிதழ் பூக்களாய்
தமிழ்க் கோர்த்த மாலையாய்
பிறந்திடும்  அவன் பார்வையிலே!

தூய்மையின் நிறம் சொல்லும்
வெண் கடுதாசி ஏடுகளும்
அவன் பேனையின் மை பட
பேரழகு பெற்றிடும் -இன்னும்
சில துளி கவிக்காய்
ஏங்கியே நின்றிடும் - அவன்
பாக்களின் சொல்லாலே!

மாயத்திரையை நுகர்ந்து
மனதிலே அழகிய கோலமிட்டு
யதார்த்த வரிகளாய் அமைத்து
ரசிக்கும்படியாய் அமைத்து
சொற்களோடு விளையாடும்
அவன் அழகிய எண்ணங்களே!

எளிமையாய் வாழ்ந்திடும்
அமைதியை நேசித்திடும்
உறவுகளை மதித்திடும்
உணர்வுகளை ரசித்திடும்
உள்ளங்களை படித்திடும் -அவன்
இயல்பான வாழ்க்கையே!

வீசும் தென்றல் கூட அவனிடம்
பேசிடும்  மொழிகள்....
இருளின் சுவடுகள் அவனிடம்
காட்டிடும் கவிதைகள்.....
அந்தி வானமோ அவனிடம்
தூவிடும் சிந்தனைகள்...
கொட்டும் மழையோ அவனை
நனைத்திடும் தேன் தமிழாலே...
ஏனெனில் ,
அவனோ இயற்கை அன்னை
தன் கைகளாலே செதுக்கிவிட்ட
குழந்தையே....!!!

துஷ்யந்தி.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

விவசாயி......



பயிருக்கு முதலாளி
அவன் கை பட்டால் மண்ணும்
தினமாகும் கண்ணாடி...
அவன் வியர்வைத் துளிகளின்
விடைகளே வேளாண்மை!


ஆதவனின் ஒளிகொண்டு
ஓடிடும் அவன் வாழ்வு...
பருவகால மாற்றங்கள்
காட்டிடும் நல்ல நேரங்கள்
வீசிடும் காற்று அவனுக்கு
கூறிடும் திசைகள்....!


மருதநிலத்து சொந்தக்காரன்
உழவனெனும் விவசாயி
உழவாரமிட்டு களை செதுக்கி
பண்படுத்திய வயலிலே
உழுதிடுவான் உழவன்...!


உழலைமரம் கட்டிய மாடுகள்
உழலும் போது மண்ணும்
வளியூட்டப்பட்டு புறட்டப்பட்டு
மாறிடும் செழிப்பாக....!


வளமாக்கிய பாத்திகளில்
பதமாய் நீரிட்டு வரம்புகட்டி,
பதரில்லா விதைதனை
பார்த்துப் பார்த்து நட்டுவைத்து
கத்தரி வெருளி ஒன்றை
காவலிட்டு இராப்பகலும்
காத்திடுவான் விவசாயி!


பசளையிட்டு களைபிடுங்கி
கிருமிநாசினி மருந்து தெளித்து
பீடைகள் தாக்கிடாவண்ணம்
பீடைக்கட்டுப்பாடும் செய்து
பயிர்கள் பதமாய்
பருவமடையும் வரை காத்து
வேளாண்மை ஒன்றையே
எதிர்பார்ப்பவன் விவசாயி!


ஊரெல்லாம் கடன்பட்டு
பயிருக்காய் முதலீடிட்டு
உதிரமெல்லாம் வியர்வையாக்கி
காத்திருக்கும் பயிர்ச்செய்கை
வீணாகும் நேரத்தில்
வேதனை தாங்காமல்
மரணம்வரை செல்வதயும் இங்கு
நாம் நினைவூட்டல் 
வேண்டும்!

அன்று தொட்டு இன்றுவரை
அவன் நிலைமை மாறவில்லை
அரசன் காலத்திலும் அப்படியே
நவீன யுகத்திலும் அப்படியே
மாறியதென்னவோ - அவன்
கையாலும் முறையொன்றே!


-நன்றி-
-அன்புடன்-
-துஷ்யந்தி-

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

இந்தப் புன்னகை போதுமடி.



கலயத்திலே தண்ணீர் கொண்டு
வீதியிலே வரும் பெண்ணே.......

உன் மனசிலே பாரமில்லா நிலை
எப்படி சொல்லு பெண்ணே!


வெறுப்பில்லா புன்னகை உன்
வதனத்தில் தவழுதடி.....
பணம் கொடுத்தும் அதை நான்
பெறுவது தான் கடினமடி!


ஏழ்மையின் கொடுமை உன்னிடம்
தோற்றுப்போகும் விடயமடி.....
ஏங்கியே நிற்போர்க்கு உன்
வாழ்க்கை சிறந்த பாடமடி!


கைவீசி நடக்கையிலே நீ
அழகை கொட்டிச் செல்லுகின்றாய்....
இயற்கையாய் உனைப்பார்க் நான்
வரம் வாங்கிய ஜீவனடி!


பூங்காற்று உனைப்பார்த்து
புதுக்கவிதை பாடுதடி...
மானும் மயிலும் உனைப் பார்த்து
ஆனந்த நடனம் ஆடுதடி!


உன் புன்னகையிடம் நான்
இங்கே எதுவுமில்லா ஏழையடி...
இறைவன் பார்வையிலே நீ
என்றும் வாச மலரடி!


சின்னச் சின்ன சந்தோஷங்கள்
உன் மடியில் விளையாடுதடி....
உனைப்போல வாழ்ந்துவிட்டால்
உலகில் துன்பம் இல்லையடி!!!


 
-நன்றி-
-அன்புடன்-
-துஷ்யந்தி-